கூடலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி ஆதிவாசி வாலிபர் பலி


கூடலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி ஆதிவாசி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Sept 2021 8:13 PM IST (Updated: 19 Sept 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி ஆதிவாசி வாலிபர் பலி

கூடலூர்

கூடலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி ஆதிவாசி வாலிபர் பலியானார். அவரது உடலை பல மணி நேரம் தேடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

குளிக்கச் சென்றார்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பாறக்கொல்லி ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கேத்தன். இவரது மகன் மணி (வயது 25). இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று மதியம் 12 மணிக்கு கோழிக்கண்டி என்ற இடத்தில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றார்.

பின்னர் மணி தனது நண்பர்களுடன் தடுப்பணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென மணி  தடுப்பணையில் மூழ்கினார். 

இதைக் கண்ட அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தடுப்பணையில் மூழ்கி பலி

இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தடுப்பணைக்குள் தீயணைப்பு வீரர்கள் இறங்கி மணியை தேடினர்.

 தடுப்பணையில் தண்ணீர் முழு கொள்ளளவு இருந்ததால் தீயணைப்பு துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து தடுப்பணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வகையில் ஒரு பகுதியில் துளைகள் இடப்பட்டது.

பின்னர் பாதியளவு தண்ணீர் குறைந்தவுடன் மாலை 5.30 மணிக்கு வாலிபர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதைக்கண்ட ஆதிவாசி மக்கள் மணியின் உடலை கண்டு கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. 

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story