நீலகிரியில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


நீலகிரியில்  5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 Sept 2021 8:13 PM IST (Updated: 19 Sept 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஊட்டி

நீலகிரியில் நடந்த சிறப்பு முகாமில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீலகிரி சாதனை

நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. 

தொடர்ந்து வருகிற 3 மாதங்களுக்குள் அனைவருக்கும் 2-வது டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 4 வட்டாரங்கள், 11 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 295 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தி அடைந்தவர்கள் ஆர்வத்துடன் சிறப்பு முகாமுக்கு வந்து 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு சென்றனர். 

மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். வீடு, வீடாக எடுத்த கணக்கெடுப்பின்படி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.

கொரோனா தடுப்பூசி

295 மையங்களில் 1,180 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. சுகாதார குழுவினர் பழங்குடியின கிராமங்களில் முகாமிட்டு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தினர். 

மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த நாட்கள் ஆனவர்களை கண்டறிந்து மையங்களுக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் சில மையங்கள் மக்கள் இன்றி வெறிச்சோடியது. இரவு 7 மணி நிலவரப்படி 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story