திண்டுக்கல் மாவட்டத்தில் 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் கடந்த 12-ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 1,225 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதையடுத்து 2-வது கட்டமாக மாவட்டம் முழுவதும் 359 இடங்களில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மண்டபங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த இந்த முகாமில் 23 ஆயிரத்து 147 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6 ஆயிரத்து 977 பேர் 2&ம் தவணை தடுப்பூசி என மொத்தம் 30 ஆயிரத்து 124 பேர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
12 லட்சம் பேர்...
இதுகுறித்து கலெக்டர் விசாகன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு முயற்சியாகவே கடந்த 12-ந்தேதியும், இன்றும் (அதாவது நேற்று) மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 99 ஆயிரத்து 242 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 2 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் 12 லட்சத்து 29 ஆயிரத்து 950 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்றார்.
Related Tags :
Next Story