கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 19 Sept 2021 9:26 PM IST (Updated: 19 Sept 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

வாரவிடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வாகனங்கள் அதிக அளவில் படையெடுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்: 


படையெடுத்த வாகனங்கள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். 

இதனால் வாரத்தில் அனைத்து நாட்களிலும் நகரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.  இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். 

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வேன், பஸ்களில் கொடைக்கானலுக்கு அதிகாலை முதலே படையெடுத்தனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

மழையும், குளிரும்
இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. அதன்பிறகு விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் நகரில் பகலிலும் கடும் குளிர் நிலவியது. இந்த சீதோஷ்ண சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். 

மழை பெய்தாலும் சுற்றுலா பயணிகள் அதை பொருட்படுத்தாமல் சுற்றுலா இடங்களை பார்வையிட்டு உற்சாகம் அடைந்தனர். குறிப்பாக பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் பைன்மரக்காடு, பில்லர்ராக், மோயர்பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் நடைபயணம் மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் பொழுதை கழித்தனர். 

Next Story