மாவட்டத்தில் 5 மையங்களில் தட்டச்சு தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 4 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
திண்டுக்கல்:
தட்டச்சு தேர்வு
அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். தமிழ் (இளநிலை, முதுநிலை), ஆங்கிலம் (இளநிலை, முதுநிலை) என 2 பிரிவாக இந்த தேர்வு நடைபெறும். அதன்படி கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் வழக்கம் போல் இந்த தேர்வு நடந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆகஸ்டு மாதம் நடத்தப்பட வேண்டிய தட்டச்சு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனாலும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து ஓராண்டாக தட்டச்சு பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி (அதாவது நேற்று) தட்டச்சு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று தட்டச்சு தேர்வு நடத்தப்பட்டது.
5 மையங்களில்...
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லூரி, புனித வளனார் பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்.வி.எஸ். கல்லூரி, ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லூரி, பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 5 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் 498 பேரும், புனித வளனார் பாலிடெக்னிக் கல்லூரியில் 746 பேரும், ஆர்.வி.எஸ். கல்லூரியில் 1,553 பேரும், ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லூரியில் 367 பேரும், பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 860 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 24 பேர் நேற்று தேர்வு எழுதினர்.
ஆய்வு
தேர்வு மையங்களில் கொரோனா விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வு எழுதினர். தேர்வு அறைக்கு செல்லும் முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்பட்டது.
எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த தேர்வை முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட பழனியாண்டவர் கல்லூரி பேராசிரியர் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 8.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.05 மணி வரை நடந்தது.
Related Tags :
Next Story