கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்
ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று மனித சங்கிலிபோராட்டம் நடத்தினர்.
சிமெண்டு தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.கைலாசபுரம் பகுதியில் புதிதாக தனியார் சிமெண்டு தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு கைலாசபுரம், சவரிமங்கலம், ஜம்புலிங்கபுரம், உமரிகோட்டை உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி ஆகியோரை நேரில் சந்தித்து சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் பொதுமக்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்த பதிலும் தரவில்லை என தெரிகிறது.
மனித சங்கிலி போராட்டம்
இதனால் விரக்தி அடைந்த கிராம பொதுமக்கள் தனியார் சிமெண்டு தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.கைலாசபுரத்தில் நேற்று மாலை 5மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், 7 கிராம மக்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு கைலாசபுரத்திலிருந்து புதியம்புத்தூர் செல்லும் சாலை வழி நெடுகிலும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story