தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
கிடப்பில் போடப்பட்ட பூங்கா பராமரிப்பு பணி
கம்பத்தில் உள்ள காந்திஜி பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கட்டுமான பணிக்காக பூங்கா வளாகத்தில் ஜல்லிக்கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பணிகளை தொடங்குவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது அந்த பூங்கா குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, கம்பம்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள் நத்தம் ஊராட்சி எஸ்.பாறைப்பட்டியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. பக்கத்து ஊரான சங்கிலியபட்டிக்கும் இதே நிலை தான். இதனால் 2 கிராமங்களிலும் உள்ள வீடுகளில் தேங்கும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதில் கொசுப்புழுக்கள் உருவாவதால் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவக்குமார், எஸ்.பாறைப்பட்டி.
பஸ்சுக்குள் ஒழுகும் மழைநீர்
மதுரையில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் சில சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் மழைக்காலத்தில் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பஸ்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜசேகர், வத்தலக்குண்டு.
வேகத்தடை அமைக்க வேண்டும்
தேனியை அடுத்த தங்கம்மாள்புரத்தில் இருந்து உப்புத்துரை செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக 2, 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக செல்கின்றனர். இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே உப்புத்துரை சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், தங்கம்மாள்புரம்.
2 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை
திண்டுக்கல்லில் இருந்து குண்டம்பட்டி வழியாக நல்லமநாயக்கன்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நல்லமநாயக்கன்பட்டிக்கு திண்டுக்கல்லில் இருந்து பஸ் இயக்கப்படுவது இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ&மாணவிகள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பிரதான சாலையை அடைகின்றனர். பின்னர் அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சில் செல்லும் நிலை உள்ளது. எனவே நல்லமநாயக்கன்பட்டிக்கு மீண்டும் பஸ் சேவையை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முககுமார், நல்லமநாயக்கன்பட்டி.
தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்குமா?
திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து ஊராட்சி வாழைக்காய்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீமுகின், வாழைக்காய்பட்டி.
கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
தேனி அரண்மனைபுதூர் வீரலட்சுமி கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், அரண்மனைபுதூர்.
பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி
உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 8-வது வார்டில் கக்கன்ஜி நகரில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கடந்த 8 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-அபினேஷ்வரன், கோம்பை.
Related Tags :
Next Story