மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்க கூடாது
பொள்ளாச்சியில் இன்று மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்க கூடாது என்று ரெயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி-போத்தனூர் இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதையை ரூ.37 கோடியே 30 லட்சம் செலவில் மின் மயமாக்கும் பணிகள் கடந்த ஒராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி மின்சார ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தை பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மற்றும் அதிகாரிகள் இன்று(திங்கட்கிழமை) நேரில் வந்து ஆய்வு நடத்துகின்றனர்.
அப்போது பொள்ளாச்சி-போத்தனூர் இடையே அதிவேகமாக மின்சார ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி ரெயில் பாதையில் தண்டவாளங்களை நவீன எந்திரம் மூலம் சரி செய்யும் பணி நடைபெற்றது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி-போத்தனூர் இடையே மின் மயமாக்கல் பணிக்கு 906 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மின் மயமாக்கல் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் 25 கிலோ வாட் மின்சாரம் செலுத்தப்பட்டு மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்வதையொட்டி இன்று மீண்டும் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தண்டவாளத்தை கடக்க வேண்டாம். மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story