அணையில் இருந்து ஆழியாற்றில் தண்ணீர் திறப்பு


அணையில் இருந்து ஆழியாற்றில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 19 Sept 2021 10:36 PM IST (Updated: 19 Sept 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

அணையில் இருந்து ஆழியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. தொடர் மழையின் காரணமாக அணை நிரம்பி உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி அடிக்கடி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 17&ந்தேதி அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையில் அம்பராம்பாளையம் ஆழியாற்றில் குளிக்க சென்ற நபர் வெள்ளத்தில் சிக்கி கொண்டார். அவரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். அணை நிரம்புவதற்கு முன்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது ஆழியாறு அணை நிரம்பி உள்ளது. அணைக்கு நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை, ஆழியாறில் கரையோரம் வசிக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆற்றில் இறங்கி குளித்தல் மற்றும் துணிகளை துவைத்தல் கூடாது. மேலும் கால்நடைகளையும் ஆற்றில் குளிக்க வைக்க கூடாது. இது தவிர குழந்தைளை ஆற்று பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story