வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 Sept 2021 10:36 PM IST (Updated: 19 Sept 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

சந்தவாசலில் வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் பங்களா தெருவை சேர்ந்தவர் பாரத் (வயது 25). இவர் குடியாத்தம் நகரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வாரம் ஒருமுறை மட்டும் வீட்டுக்கு வருவார். இவரது மனைவி பிரவிணா (21). கர்ப்பிணியான இவர்  தாய் வீடான அரியபாடி கிராமத்திற்கு சென்று விட்டார்.

இதனால் வீடு பூட்டியிருந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள், கால் கிலோ வெள்ளி கொலுசு, ரொக்கப் பணம் ரூ 9,500 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். 

நேற்று காலை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து பாரத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக வந்து பார்த்தபோது நகை&பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சந்தவாசல் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபோன்று சந்தவாசல் பகுதியில் இரண்டு வீடுகளிலும் திருட்டுகள் நடந்துள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வெளியூரில் இருப்பதால் அவர்கள் வந்த பின்னரே திருட்டு போன பொருட்கள் விவரம் தெரியவரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Next Story