பழப்பெட்டியில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே பழப்பெட்டியில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாபு, சப்&இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு சிவபாலன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரில் இருந்து தனியார் பஸ் ஒன்றில் பழப்பெட்டிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்கோவிலூர் அருகே டி.குன்னத்தூர் மற்றும் எல்ராம்பட்டு பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டி.குன்னத்தூர், எல்ராம்பட்டில் தனியார் பஸ்சில் இருந்து பழப்பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டன.
அந்த பெட்டிகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 576 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாவந்தூர் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த உத்திரன் (வயது 36), மேட்டுக்குப்பம் புதுமனை பகுதியை சேர்ந்த சக்தி விநாயகம் (32), மேட்டு தெருவை சேர்ந்த விக்கிரமன் (34), அதே ஊரை சேர்ந்த பாலு(38), வீரநாம் பட்டு கிராமத்தை சேர்ந்த ராமராஜ்(20) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
மேலும் கடத்தி வரப்பட்ட 576 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி செல்ல கொண்டுவரப்பட்ட 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அருதங்குடி கிராமத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதே ஊரை சேர்ந்த கண்ணன் என்பவர் வீட்டு குளியல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 912 மதுபாட்டில்களை திருப்பாலபந்தல் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கண்ணன் மனைவி கமலா (62), பாலமுருகன் (30), அரியபிள்ளை (70)ஆகிய 3 பேர் மீது திருப்பாலபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்&இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story