இலங்கைக்கு கடத்த முயன்ற 1500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற 1500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Sept 2021 12:20 AM IST (Updated: 20 Sept 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தேவிப்பட்டினத்தில் அரியவகை கடல் குதிரைகள் சிக்கின.

பனைக்குளம், 

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தேவிப்பட்டினத்தில் அரியவகை கடல் குதிரைகள் சிக்கின.

1,500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான படகு ஒன்று நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினரும் மற்றும் இந்திய கடலோர காவல்படையினரும் இணைந்து ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் மனோலிதீவு பகுதிக்கு சென்றனர். கடலோர காவல்படை கப்பல் தூரத்தில் வருவதை பார்த்து படகில் இருந்த சிலர் கடலில் குதித்து நீந்தி தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகின்றது.
அப்போது மனோலி தீவு அருகே உள்ள நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர். சோதனை செய்தபோது இந்த படகில் சுமார் 130 மூடைகளில் இறந்த 1,500 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினரும், வனத்துறையினரும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் நாட்டு படகையும் வனத்துறை அதிகாரிகள் ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜய்ஆனந்த் உத்தரவின் பேரில் அந்த கடல் அட்டைகள் அனைத்தும்
 அழிக்கப்பட்டன. 

தப்பியவர்கள் யார்?
மண்டபம் அருகே மனோலி தீவு கடல் பகுதியில் பதிவு எண் இல்லாத படகிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,500 கிலோ கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலும் அந்த படகில் பதிவு எண் ஏதும் இல்லாததால் கடலில் நீந்தி தப்பி ஓடிய நபர்கள் யார் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில் உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனவர் சடையாண்டி வனக்காப்பாளர்கள் பிரபு, சுதாகர், ஆரோக்கியம் சக்திதேவி உள்ளிட்ட வன பாதுகாப்பு படை மற்றும் வன காவல் படையும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

ஒருவர் கைது
அப்போது கடற்கரையில் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த சுமார் 22 கிலோ கடல் அட்டைகள் மற்றும் கடல் குதிரைகள் 10&யையும் வன பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து வந்ததாக தேவிபட்டினத்தைச் சேர்ந்த முகமதுயாசர் அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மண்டபம் மற்றும் தேவிபட்டினம் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த கடல் அட்டைகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்ட பின்பு கடத்தல் ஏஜெண்டுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் என்று கூறப்படுகின்றது.


Next Story