மருதூர் பகுதியில் ரூ.750 கோடியில் கதவணை; அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்


மருதூர் பகுதியில் ரூ.750 கோடியில் கதவணை; அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2021 12:31 AM IST (Updated: 20 Sept 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

மருதூர் பகுதியில் ரூ.750 கோடியில் கதவணை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார்.

குளித்தலை, 
ரூ.750 கோடியில் கதவணை
குளித்தலை அருகே உள்ள மருதூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.750 கோடியில் கதவணை கட்டப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தநிலையில் குளித்தலை பகுதிக்கு வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கதவணை அமைய உள்ள இடத்தை நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
3,750 ஏக்கர் நிலம்
விவசாயிகளின் நலனை பேணிகாக்கும் பொருட்டு மருதூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.750 கோடியில் கதவணை கட்டப்படுகிறது. இத்திட்ட பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த கதவணை கட்டப்பட்டால் 1 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் தேக்கப்பட்டு வாய்க்கால்கள் மூலம் விவசாயிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். 
பல ஆண்டுகளாக மக்கள் விடுத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார். போக்குவரத்து வசதியுடன் இந்த கதவணை அமைக்கப்பட உள்ளது. இக்கதவணை அமைவதால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படும். மேலும், வாய்க்கால்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சுமார் 3,750 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவது உறுதி செய்யப்படும். இதுபோல் கரூர் மாவட்டத்தில் மேலும் 2 இடங்களில் கதவணை அமைக்கப்பட உள்ளன.
புதிய பஸ்நிலையம்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெயர் மாற்றப்பட்ட குளித்தலை அரசு கலைக்கல்லூரியின் பெயரை மீண்டும் பழைய பெயரிலேயே செயல்படுவதற்காக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். குளித்தலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குளித்தலையில் புதிய பஸ்நிலையம் அமைக்க முதற்கட்டமாக உகந்த இடம் தேர்வு செய்யப்படும். பின்னர் புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவு வழங்குவார்.
தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் 619 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. விரைவில் 100 சதவீத தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக கரூர் மாவட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வே.பல்லவிராஜா, குளித்தலை ஆர்.டி.ஓ. (பொறுப்பு) தட்சணாமூர்த்தி, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் திருச்சி மணிமோகன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா மற்றும் வருவாய் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story