பிரதமர் படம் இல்லாததை கண்டித்து பா.ஜனதாவினர் மறியல்


பிரதமர் படம் இல்லாததை கண்டித்து பா.ஜனதாவினர் மறியல்
x
தினத்தந்தி 20 Sept 2021 12:33 AM IST (Updated: 20 Sept 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை நகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட தடுப்பூசி முகாம் துண்டுபிரசுரத்தில் பிரதமரின் படம் இல்லாததை கண்டித்து சிவகங்கையில் பா.ஜனதாவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை,

சிவகங்கை நகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட தடுப்பூசி முகாம் துண்டுபிரசுரத்தில் பிரதமரின் படம் இல்லாததை கண்டித்து சிவகங்கையில் பா.ஜனதாவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

பிரதமர் படம் இல்லை

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக 2-வது கட்ட தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சிவகங்கை நகராட்சியின் சார்பில் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து துண்டுபிரசுரம் அச்சடித்து வீடு வீடாக வழங்கப்பட்டது. இந்த துண்டுபிரசுரத்தில் பிரதமர் மோடி படம் இடம் பெறவில்லை என தெரிகிறது.
 இதை கண்டித்து சிவகங்கை மாவட்ட பா.ஜனதா தலைவர் மேப்பல் சக்தி, தலைமையில் பொதுச் செயலாளர் பாலமுருகன், சிவகங்கை நகர் தலைவர் தனசேகரன், மற்றும் உதயா உள்ளிட்ட ஏராளமான பா.ஜனதாவினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு தர்ணா போராட்டம் நடத்த சென்றனர். அங்கு கலெக்டர் இல்லாததால் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் முன்பாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம் கணேஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

சாலை மறியல்

 இதில் சமாதானம் அடையாத பா.ஜனதாவினர் சிவகங்கை பஸ் நிலையத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம், நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் பின்னர் பா.ஜனதாவினர் மறியல் போராட்டத்தை கைவிட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் பா.ஜனதாவினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story