ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை
தேவகோட்டை அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற பேராசிரியர்
தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயல் பகுதியை சேர்ந்தவர் பிச்சையப்பன்(வயது 78). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ராமசாமி செட்டியார்(48). பிச்சையப்பன் தனது மகன் ராமசாமி செட்டியார் குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி ஆறாவயலுக்கு குடும்பத்துடன் வந்த ராமசாமி செட்டியார் அதன்பிறகு வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் ராமசாமி செட்டியார் மட்டும் ஆறாவயலில் உள்ள வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தங்க, வைர நகைகள் கொள்ளை
இதனால் பதறி அடித்து கொண்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பெட்டகம் கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. அதனுள் வைக்கப்பட்டு இருந்த 34 பவுன் நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள், வைர நகைகள் என ரூ.17 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம கும்பல் இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை அறிந்து கைவரிசை காட்டி உள்ளனர். இது குறித்து உடனடியாக அவர் ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ நடந்த வீட்டை பார்வையிட்டனர். தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு போலீசாருடன் ஆலோசித்தார். கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவத்தை துப்பு துலக்க தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொள்ளை நடந்த வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகள் உருவம் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story