நாமும், எதிர்கால சந்ததியினரும் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும்


நாமும், எதிர்கால சந்ததியினரும் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Sept 2021 12:46 AM IST (Updated: 20 Sept 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

நாடு முன்னேற நாமும், எதிர்கால சந்ததியினரும் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என வ.உ.சி.யின் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர், 
நாடு முன்னேற நாமும், எதிர்கால சந்ததியினரும் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என வ.உ.சி.யின்  பிறந்த நாள் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். 
பிறந்தநாள் விழா 
விருதுநகரில் வெள்ளாளர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழாவும், அவருக்கு பெருமை சேர்த்த முதல்-அமைச்சருக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
நாம் இங்கு  சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் அமர்ந்து இருக்க காரணம் தியாகச்செம்மல் வ.உ.சி. போன்றவர்கள் செய்த தியாகம் தான். வ.உ.சி. வசதியுடன் வாழ்ந்தவர். அவர் வெள்ளை ஏகாதிபத்தியத்துடன் ஒத்துப்போயிருந்தால் ராவ்பகதூர் போன்ற பட்டங்களை பெற்று மேலும் வசதியாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அவர் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் வெள்ளை ஏகாதிபத்தியத்தினரை எதிர்த்து நின்றதால் தான் சொத்துக்களை இழந்தார்.
தியாக உணர்வு 
 தனது இறுதி நாட்களில் அவர் அனைத்து வசதிகளையும் இழந்து மிகவும் சிரமத்திற்குள்ளானார். வ.உ.சி. தேசப்பற்றும், தியாக உணர்வும் ஈடு இணை இல்லாதது ஆகும். எனவே நாடு முன்னேற, மாநிலம் முன்னேற, நாமும் எதிர்கால சந்ததியினரும் வ.உ.சி.யைப்போல் தேசப்பற்றுடன் விளங்க வேண்டும். கடந்த  தேர்தலின் போது வெள்ளாள சமுதாயத்தினர் எங்களுக்கு வாக்களித்ததால் தான் நாங்கள் பெருவாரியாக வெற்றி பெற்றோம்.
 நீங்கள் கோரிக்கைகளை கேட்க உரிமை இருக்கிறது. அதை நிச்சயம் நிறைவேற்றி தருவோம்.
 இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி அசோகன், வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் அண்ணா சரவணன், மாநில இளைஞரணி தலைவர் எம்.என்.பி.ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா,  அருப்புக்கோட்டை டாக்டர் சுந்தரமூர்த்தி,  மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் புங்கன் பிள்ளை, தொழிலதிபர் மனிதத்தேனீ வி. சுந்தரமூர்த்தி, வ.உ.சி.யின் பேத்தி செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


Next Story