காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்
அச்சன்புதூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அச்சன்புதூர்:
அச்சன்புதூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வனத்துறையினர் ரோந்து
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் அச்சன்புதூர் அருகே மேக்கரை பிரிவு வெள்ளக்கல்தேரி பீட் எல்லைக்குட்பட்ட செந்நாய்பொத்தை பரம்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், கடையநல்லூர் பிரிவு வனவர் லூமிக்ஸ், சிறப்பு பணி வனவர் செல்லத்துரை மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் டார்ச் லைட், வேட்டை நாய்களுடன் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வந்த 4 பேரை பிடித்து அவர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தனர்.
6 பேருக்கு அபராதம்
அப்போது தப்பி ஓடிய கரிசல்குடியிருப்பை சேர்ந்த கவியரசு (வயது 20), சுபாஷ் (22), பார்வதிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (22), கருத்தப்பாண்டி (21), காசிதர்மத்தை சேர்ந்த முகின்குமார் (21), வெங்கடேஷ் (23) ஆகிய 6 பேரையும் வனத்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 6 பேரையும் வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். அதன் பின்னர் நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன் உத்தரவுப்படி 6 பேருக்கும் மொத்தம் ரூ.1.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
மான் வேட்டை
மேலும் கடையநல்லூர் அருகே ஆய்க்குடி மலைப்பகுதியில் சுருக்கு வலை வைத்து மான்களை வேட்டையாடியதாக, ஆய்க்குடி எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த சண்முகவேல் (63) என்பவரை கடையநல்லூர் வனத்துறையினர் ஏற்கனவே கைது செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் திருமலைக்குமார் (34), கருப்பையா மகன் முத்துசெல்வன் (30) ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Related Tags :
Next Story