ஏ.டி.எம். எந்திரங்களுக்கு நிரப்பாமல் ரூ.24 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது
ஏ.டி.எம். எந்திரங்களுக்கு நிரப்ப வேண்டிய பணத்தில் ரூ.24 லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, செப். 20-
ஏ.டி.எம். எந்திரங்களுக்கு நிரப்ப வேண்டிய பணத்தில் ரூ.24 லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.24 லட்சம் கையாடல்
புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த தனியார் நிறுவனத்தில் சங்கர் என்பவர் மேலாளராக உள்ளார். இந்த நிலையில் அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தணிக்கை செய்தபோது இந்திராகாந்தி சிலை அருகே உள்ள ஒரு வங்கியில் பெற்ற ரூ.24 லட்சத்து ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பாதது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பி வந்த ஊழியரான வில்லியனூரை சேர்ந்த கொளஞ்சியப்பன் (42) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொளஞ்சியப்பனும், அவருடன் வேலை செய்த கோட்டக்குப்பத்தை சேர்ந்த முபாரக் அலி (37) என்பவரும் சேர்ந்து ரூ.24 லட்சத்து ஆயிரத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.
ஊழியர் கைது
இது குறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் சங்கர் பெரியகடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொளஞ்சியப்பன், முகாரக் அலி ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொளஞ்சியப்பன் வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கொளஞ்சியப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள முபாரக் அலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story