கதண்டுகள் கடித்ததால் பெண்கள் உள்பட 30 பேருக்கு சிகிச்சை
கதண்டுகள் கடித்த பெண்கள் உள்பட 30 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வி.கைகாட்டி,
பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன், மணிகண்டன், அருள்மணி ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட 30 பேர் நேற்று அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைத்து வழிபட வந்தனர்.
அங்கு கோவிலின் அருகில் மரத்தடியில் அடுப்பில் தீமூட்டி பொங்கல் வைத்தனர்.
அப்போது புகை மூட்டத்தால் மரத்தின் மேல்பகுதியில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து கோவிலில் இருந்தவர்களை கடித்தன. இதனால் வலியில் துடித்த அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விளாங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் 20 பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த சரோஜா, தனம், கவிதா, சுகன்யா, நடராஜன் ஆகிய 5 பேர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் கீதாராணி, சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் விவரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலின் அருகில் உள்ள கதண்டுகளை அப்புறப்படுத்த தீயணைப்புத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story