ஒரே பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா
ஒரே பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அரியலூர்,
தமிழக அரசு உத்தரவின்படி கடந்த 1&ந் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, ஒரு வகுப்பறைக்கு 20 பேர் வீதம் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே அரியலூர் நகரில் உள்ள 2 மேல்நிலைப்பள்ளிகளில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர், அரியலூர் மாவட்டத்தில் தென்னூரில் உள்ள பள்ளியில் ஒரு மாணவி என மொத்தம் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தோற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில் அரியலூரில் உள்ள மற்றொரு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 16-ந் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு லேசான காய்ச்சல், உடல்சோர்வு இருந்ததால் அவர் உள்பட அந்த பள்ளியில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் 80 பேருக்கும், 20 ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 2 ஆசிரியர்களுக்கும், 5 மாணவர்களுக்கும் என மொத்தம் 7 பேருக்கு தோற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 2 ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 11 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று(திங்கட்கிழமை) பள்ளி திறக்கப்படுமா? என்று பெற்றோருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
Related Tags :
Next Story