கழிவுநீர் வாய்க்காலில் பெண் சிசுவை வீசிய பெண் கைது
கழிவுநீர் வாய்க்காலில் பெண் சிசுவை வீசிய பெண் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நடுவலூர் தெற்குத்தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் 7 மாத பெண் சிசு ஒன்று இறந்து கிடப்பதாக, சம்பவத்தன்று கிராம நிர்வாக அலுவலர் கனகராஜிக்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து, கனகராஜ் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கழிவுநீர் வாய்க்காலில் இருந்து பெண் சிசுவின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கழிவுநீர் வாய்க்காலில் சிசுவின் உடலை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண் சிசுவை கழிவுநீர் வாய்க்காலில் வீசியது 28 வயதுடைய பெண் என்பதும், திருமணமாகாத நிலையில் கர்ப்பமடைந்ததால் கரு கலைக்கப்பட்ட நிலையில், பெண் சிசுவை கழிவுநீர் வாய்க்காலில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story