தாரமங்கலத்தில் விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு; உறவினர்கள் திடீர் மறியல்


தாரமங்கலத்தில் விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு; உறவினர்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 20 Sept 2021 3:58 AM IST (Updated: 20 Sept 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே விபத்தில் காயம் அடைந்த கூலித்தொழிலாளி பலியான நிலையில், அவருடைய உறவினர்கள் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே விபத்தில் காயம் அடைந்த கூலித்தொழிலாளி பலியான நிலையில், அவருடைய உறவினர்கள் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூலித்தொழிலாளி சாவு
தாரமங்கலம் அருகே உள்ள பெரியசோரகை கிராமம் சீரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 55), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (50). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் தாரமங்கலம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். 
இதேபோல் சூரப்பள்ளி கிராமம் நரியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மெய்யழகன் (25). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர், சம்பவத்தன்று வெள்ளக்கல்பட்டி பிரிவு ரோட்டில் வந்து கொண்டு இருந்தார். இவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தம்பதி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நோராக மோதியது. 
இந்த விபத்தில் தம்பதி மற்றும் மெய்யழகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் வேணுகோபால் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
உறவினர்கள் மறியல்
இந்நிலையில் மெய்யழகனின் வாக்குமூலத்தின் படி தாரமங்கலம் போலீசார் வேணுகோபால் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதையறிந்த வேணுகோபாலின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டியும் கோரிக்கை விடுத்தனர். 
ஒரு கட்டத்திற்கு மேல் தாரமங்கலம்-ஓமலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேணுகோபாலின் உறவினர்களில் ஒருவர் தான் கொண்டு வந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து அதில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து அவரை  மடக்கி பிடித்த போலீசார், விபத்து தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வேணுகோபாலின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story