அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு எதிர்ப்பு: சிவாச்சாரியார்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சிவாச்சாரியார்கள் சமூக நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சிவாச்சாரியார்கள் சமூக நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சிவாச்சாரியார்கள் சமூக நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் வி.சுரேஷ் சிவாச்சாரியார் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கிண்டி சுவாமிநாதன், ஜெயக்குமார், சதீஷ்குமார், சோமசுந்தரம் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆலய வழிபடுவோர் சங்க துணைத் தலைவர் உமா ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பறிக்காதே! பறிக்காதே! சிவாச்சாரியார்கள் உரிமையை பறிக்காதே!, தலையிடாதே! தலையிடாதே! மத வழிபாட்டில் தலையிடாதே! என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வி.சுரேஷ் சிவாச்சாரியார் நிருபர்களிடம் கூறும்போது, “இந்து மதத்தை அழிப்பதற்காக கொண்டு வந்துள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ள பாரம்பரிய முறைப்படி பூஜைகள் நடைபெற வேண்டும். ஒவ்வொரு கோவில்களின் ஆகம விதிப்படி யார்? யார்? பூஜை செய்ய வேண்டும் என்று உள்ளதோ, அவர்கள் மட்டும்தான் அந்தந்த கோவில்களில் பூஜையை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story