பாறைக்குழியில் குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு


பாறைக்குழியில் குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Sept 2021 7:43 PM IST (Updated: 20 Sept 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

திருமுருகன்பூண்டி பாறைக்குழியில் குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர்
திருமுருகன்பூண்டி பாறைக்குழியில் குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குப்பை கொட்ட எதிர்ப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். அம்மாபாளையம் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்க பாதுகாப்புக்குழுவினர் அளித்த மனுவில், திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையம் கணபதிநகர் விரிவு, 11வது வார்டில் கானக்காடு பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இருந்து குப்பைகள் லாரி மூலமாக கொண்டு வந்து கொட்டி வருகிறார்கள். இதனால் அருகில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 
வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், திருப்பூர் பழைய பஸ் நிலையம் முதல் வெள்ளியங்காடு பகுதி வழியாக 6ஏ அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். அதுபோல் மகளிர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தனியாக பஸ் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கைத்தறி நெசவாளர்கள்
பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், அங்காளம்மன் நகரில் குடியிருந்து வருகிறோம். இங்குள்ள பொதுப்பாதையை தனியார் ஆக்கிரமித்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றிக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், சாமுண்டிபுரம் பகுதியில் வீடுகளுக்கான குடிநீர் குழாயில் தண்ணீர் குறைந்த அளவுக்கு வருகிறது. அழுத்தம் குறைவாக இருப்பதால் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 
திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 20&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு, நிலம் இல்லை. வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 
சுற்றுலா வாகன உரிமையாளர்கள் அளித்த மனுவில், கொரோனா ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன கடனுக்கான மாத தவணைத்தொகை செலுத்த வங்கிகள் நெருக்கடி கொடுத்து ஜப்தி செய்கிறார்கள். இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 
குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க அதிகம் பேர் நேற்று வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை பதிவு செய்து அதிகாரிகளிடம் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். 


Next Story