திண்டுக்கல் உள்பட 111 இடங்களில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல் உள்பட 111 இடங்களில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2021 9:47 PM IST (Updated: 20 Sept 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் உள்பட 111 இடங்களில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:
மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் உள்பட 111 இடங்களில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கடந்த மாதம் 20-ந்தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை உயர்த்தியது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20&ந்தேதி (அதாவது நேற்று) முதல் 30&ந்தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல்லில் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் மாநகர தலைவர் மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கைகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் கட்சி அலுவலகம் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடுகள் முன்பும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.
கண்டன கோஷங்கள்
இதேபோல் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் ராஜப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை செயலாளர் ராஜா, நகர அவைத்தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் உள்பட பலர் கருப்பு கொடிகளை ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ம.தி.மு.க. அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் செல்வேந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன், நகர துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி அய்யாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். 
மாவட்டத்தில் 111 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story