உக்கடம் மேம்பால பணிகள் 2023 ம் ஆண்டு முடிவடையும் அதிகாரிகள் தகவல்
உக்கடம் மேம்பால பணிகள் 2023 ம் ஆண்டு முடிவடையும் அதிகாரிகள் தகவல்
கோவை
உக்கடம் மேம்பால பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து உள்ளதாகவும், வருகிற 2023-ம் ஆண்டுதான் பணிகள் முழுவதும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்கடம் மேம்பாலம்
பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடம் வழியாக செல்லும்போது ஆத்துப்பாலம், கரும்புக்கடை, லாரிபேட்டை, உக்கடம் பஸ்நிலைய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்டநேரம் கடக்க தாமதம் ஆகிறது.
இதனால் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து உக்கடம் போலீஸ் நிலையம்வரை 3.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.280 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.
இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு மட்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உயர் அழுத்த மின்கம்பிகள்
இதில் உக்கடம் போலீஸ்நிலையத்தில் இருந்து கரும்புக்கடை வரை மேம்பால பணிகள் முடிவடைந்து உள்ளது. இருந்தாலும் உக்கடம் பஸ்நிலைய பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகளை தரையில் பதிக்கும் பணிகள் இன்னும முடிவடையவில்லை.
மேம்பால பணிகள் முடிவடைந்து, போக்குவரத்து தொடங்குவது எப்போது? என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி, பாலக்காடு சாலை வழியாக உக்கடம் பகுதியில் தினமும் 1 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. 16.6 மீட்டர் அகலத்தில், 126 தாங்கு தூண்களுடன் அமைக்கப்படும்
50 சதவீத பணிகள் நிறைவு
இந்த மேம்பால பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து உள்ளது. கரும்புக்கடையில் இருந்து ஆத்துப்பாலம்வரை தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் இருந்து ஏறி, இறங்கும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. அந்த இடத்தில் மட்டும் 22 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமையும்.
உக்கடம் போலீஸ்நிலையத்தின் எதிர் பகுதியில் இருந்து செல்வபுரம் பைபாஸ்சாலையில் இறங்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள 400 வீடுகன் இன்னும் அகற்றப்பட வேண்டியது உள்ளது.
2023-ம் ஆண்டு முடிவடையும்
உயர் அழுத்த மின்கம்பிகளை தரையில் பதிக்க ரூ.9 கோடியே 50 லட்சம் செலவில் பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இந்த பணிகளும் முடிவடையும். அனைத்து பணிகளும் முடிவடைந்து 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உக்கடம் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story