பரிசல் மூலம் ஆற்றை கடந்து பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம்
சிறுமுகை அருகே பரிசல் மூலம் ஆற்றை கடந்து பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
மேட்டுப்பாளையம்
சிறுமுகை அருகே பரிசல் மூலம் ஆற்றை கடந்து பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பிரசவ வலி
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியை சேர்ந்தவர் மாரி(வயது 28). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தீபா(27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை, சிறுமுகை அருகே காந்தவயல் மலைக்கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கணவர் அழைத்து சென்று இருந்தார். அங்கு நேற்று அதிகாலையில் திடீரென தீபாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சிறுமுகையில் இருந்து 2 ஆம்புலன்ஸ்களில் மருத்துவ பணியாளர்கள் புறப்பட்டு சென்றனர். ஆனால் அந்த மலைக்கிராமத்துக்கு விரைவாக செல்லும் வழியில் உள்ள காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த உயர்மட்டம் பாலம் தண்ணீரில் மூழ்கி இருந்தது.
இதனால் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி வழியாக சுற்றி காந்தவயல் பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. மற்றொரு ஆம்புலன்சை காந்தையாற்றின் கரையில் நிறுத்திவிட்டு மருத்துவ பணியாளர்கள் பரிசலில் ஆற்றை கடந்து காந்தவயலுக்கு சென்றனர்.
பாராட்டு
தொடர்ந்து பிரசவ வலியால் துடித்த தீபாவுக்கு, மருத்துவ பணியாளர்கள் பிரசவம் பார்த்தனர். அதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனே மருத்துவ பணியாளர்கள் தாமதிக்காமல் குழந்தையை பரிசல் மூலம் ஆற்றை கடந்து கொண்டு வந்து, ஆம்புலன்ஸ் மூலம் சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேலும் தாயை ஆம்புலன்ஸ் மூலம் வனப்பகுதி வழியாக அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காந்தையாற்றை பரிசல் மூலம் கடந்தும், காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியை கடந்தும் சென்று பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ பணியாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story