தேனி கனிம வள அதிகாரி அலுவலகத்தில் அரசு முத்திரையை இடைத்தரகர்கள் பயன்படுத்தியதால் வாக்குவாதம் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பரபரப்பு


தேனி கனிம வள அதிகாரி அலுவலகத்தில் அரசு முத்திரையை இடைத்தரகர்கள் பயன்படுத்தியதால் வாக்குவாதம் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Sept 2021 10:51 PM IST (Updated: 20 Sept 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

தேனி கனிம வள அதிகாரி அலுவலகத்தில் அரசு முத்திரையை இடைத்தரகர்கள் பயன்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் பலர் வந்தனர். அவர்களை நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள், செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளுவதற்கான நடைச்சீட்டு பெறுவதில் இடைத்தரகர்கள் பிரச்சினை உள்ளதாகவும், அதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகளிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அவர்களை மொத்தமாக செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல் சூளைகளுக்கு மண் எடுப்பதில் இடைத்தரகர்கள் தொல்லையை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் 6 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
வாக்குவாதம்
இதையடுத்து அவர்கள் கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகள் இல்லை. அங்கு சிலர் நடைச்சீட்டு புத்தகத்தில் அரசு முத்திரை வைத்துக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் இல்லை என்பதும், அவர்கள் கல் மற்றும் மண் குவாரிகளில் பணியாற்றுபவர்கள் என்பதும் தெரியவந்தது.
அரசு அலுவலகத்துக்குள் அமர்ந்து அரசு முத்திரையை பயன்படுத்துவதால் அவர்களும் இடைத்தரகர்கள் என அவர்களிடம் பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இடைத்தரகர்கள் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், “செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க முன்பு ஒரு நடைச்சீட்டுக்கு ரூ.3 ஆயிரம் வசூலித்தனர். இப்போது ரூ.6 ஆயிரம் வசூலிக்கிறார்கள். அதை முறையிட வந்தால் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை. அரசு முத்திரையை இடைத்தரகர்கள் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிப்பதோடு, போராட்டங்களிலும் ஈடுபட உள்ளோம்“ என்றார்.
அரசு ஊழியர்கள் அல்லாத நபர்கள் அரசு முத்திரைகளை பயன்படுத்தியதும், அவர்களிடம் பார்வர்டு பிளாக் கட்சியினர் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அடங்கிய வீடியோக்கள் நேற்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனும் விசாரணை நடத்தி வருகிறார்.
கோரிக்கை மனுக்கள்
இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மேலும் சிலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளித்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போடி அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதில், தங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் மீது தீண்டாமை வழக்கு மற்றும் பாலியல் வழக்கு தொடுப்போம் என்று மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூடலூர் நகராட்சி 3-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நகராட்சி பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். பழனிசெட்டிபட்டி சுகதேவ் தெருவை சேர்ந்த பார்த்திபன் (வயது 25) கொடுத்த மனுவில், “நான் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஐ.டி.ஐ. படித்துள்ளேன். எனக்கு கருணை அடிப்படையில் ஏதாவது ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்“ என்று கூறியிருந்தார். பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஆதிமுருகன் கொடுத்த மனுவில், கட்டுமான தொழிலாளியான தனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Next Story