கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 20 Sept 2021 11:23 PM IST (Updated: 20 Sept 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

வேட்டவலம் அருகே கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கற்கால பாறை ஓவியங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள மலையருகே பண்டைய கால ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா கொடுத்த தகவலின் படி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த மதன்மோகன், பழனிசாமி, பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
 
வேட்டவலத்திற்கு வடகிழக்காக அமைந்துள்ள மலைப்பகுதியில் நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தின் நந்தன் கால்வாய் அருகே ஒரு பாறையில் இரண்டு பகுதிகளாக ஒவியங்கள் காணப்பட்டன. 

இதில் பாறையின் உயரமான பகுதியில் உள்ள ஓவியத் தொகுதியில் மீன் அல்லது ஆமை போன்ற தோற்றம் கொண்ட செஞ்சாந்து நிறத்தில் சுமார் 3 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட ஒரு ஓவியமும், அதன் அருகில் ஊர்வன போன்ற வடிவம் கொண்ட ஓவியம் சுமார் 2 அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்டு உள்ளது.

அதன் அருகில் சுமார் 1 அடி நீளமும், 1 அடி அகலமும் கொண்ட சிறிய அளவிலான மீன் அல்லது ஆமை போன்ற வடிவம் கொண்ட மற்றொரு ஓவியமும் அமைந்துள்ளது. 

இந்த பாறையின் கீழ்பகுதியில் அமைந்துள்ள ஓவியத் தொகுதியில் இரண்டு மனிதர்கள் உருவமும் வடிவியல் சார்ந்த குறியீடு கொண்ட ஓவியங்களும் உள்ளன. 

இந்த ஓவியங்கள் வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள பாக்கம் கிராமத்திலும் ஏரிக்கரையின் அருகில் உள்ள மற்றொரு பாறை ஒன்றில் மங்கலான நிறமுடைய வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியபட்டன.

ஆவணப்படுத்த வேண்டும்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இங்கு 2 காலகட்டத்தை சேர்ந்த ஓவியங்கள் உள்ளன. முதலாவது பிரிவில் உள்ள ஓவியங்கள் வெண்சாந்து மற்றும் செஞ்சாந்து நிறங்கள் கலந்த ஓவியங்கள் உள்ளன. இவை புதிய கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

2-வது தொகுதி ஓவியங்கள் வடிவியல் சார்ந்த குறியீடுகள் தனியாகவும் மனித உருவங்களும் சேர்ந்து வரையப்பட்டுள்ளன. இதில் கோடுகள் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் காட்டப்பட்டுள்ளது. சில குறியீடுகள் கீழ்வாலை மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள குறியீடுகள் போன்ற வடிவத்தை ஒத்துள்ளது. 

மேலும் இங்கு காட்டப்பட்டு உள்ள மனித உருவங்களில் ஆண்குறி காட்டப்பட்டு உள்ளது. இதுபோன்று ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. அருகில் உள்ள பாக்கம் கிராம எல்லையில் உள்ள ஓவியங்கள் மங்கிய நிலையில் மனித உருவங்கள் மட்டும் வரையப்பட்டுள்ளது.

இந்த ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்களாக கருதப்படுகின்ற ஓவியங்கள் போல உள்ளது. இந்த பகுதிக்கு அருகில் உள்ள செத்தவரை, கிழ்வாலை போன்ற ஊர்களிலும் ஏற்கனவே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 

தொடர்ச்சியாக இப்பகுதியில் பாறை ஓவியங்கள் கிடைத்து வருவது இதன் தொல்லியல் முக்கியத்துவத்தையும் அக்கால மனிதர்களின் கலை சிறப்பினையும் உணர்த்துகிறது.

இவ்வோவியங்களை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை பாதுகாத்தும். ஆவணப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story