கடம்பூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்


கடம்பூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 20 Sep 2021 6:00 PM GMT (Updated: 20 Sep 2021 6:00 PM GMT)

வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நகைகள் ஏலம் கடம்பூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம் மாவட்ட இணைப்பதிவாளர் உத்தரவு

ரிஷிவந்தியம் 

ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடம்பூர், ஓடியந்தல், மரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளனர். பொதுமக்கள் சிலர் அடகு வைத்துள்ள நகைகளை வட்டி கட்டி மீட்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் சென்றுள்ளனர்.

அப்போது உங்களது நகைகள் ஏலம் விடப்பட்டதாக அங்கு பணிபுரியும் செயலாளர் திருநாராயணன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முறையான முன்னறிவிப்பின்றி நகைகள் ஏலம் விடப்பட்டதை கண்டித்து கூட்டுறவு சங்க செயலாளர் திருநாராயணனுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கடம்பூர், மரூர், ஓடியந்தல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூட்டுறவு சரக கள அலுவலர் கமலகண்ணன் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார். 

தொடர்ந்து நகைகள் ஏலம் விடப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் முறையான அறிவிப்பு இல்லாமல் நகைகளை ஏலம் விட்டது தெரியவந்ததை அடுத்து கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் திருநாராயணணை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பிரபாகரன் உத்தரவிட்டார்.


Next Story