போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்த அ.தி.மு.க.வினர்
வக்கீல் மீதான தாக்குதலை கண்டித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி;
வக்கீல் மீதான தாக்குதலை கண்டித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தாக்குதல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது55). வக்கீலான இவர் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாவட்ட இணைச் செயலாளராகவும் இவர் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சிலர் புறம்போக்கு இடங்களில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து லாரிகளில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகஒரு லாரியை வக்கீல் சுரேஷ்குமார் சிறைபிடித்து லாரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, ஆகியோர் சுரேஷ்குமாரை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
போலீஸ் நிலையத்தில் திரண்டனர்
மறுநாள் காலை சுரேஷ்குமார் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற போது அவரை ஒரு சிலர் தாக்கினர். இது குறித்து சுரேஷ்குமார் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. அ.தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதலை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் திருத்துறைப்பூண்டியில் 23ந் தேதி(வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று வக்கீல் சுரேஷ்குமார், திருத்துறைப்பூண்டி அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முக சுந்தர், தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் செல்லபாண்டியன், வெற்றிச்செல்வன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சீராளன், திருத்துறைப்பூண்டி நகர பொருளாளர் ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் 23ந் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துவிட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளியேறினர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story