கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு
ராமநாதபுரத்தில் மகனை மீட்டு தரக்கோரி கலெக்டர் முன் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் மகனை மீட்டு தரக்கோரி கலெக்டர் முன் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளம்பெண்
ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை சங்குமுத்துமாரி நகர் பகுதியை சேர்ந்தவர் முனீசுவரி (வயது 29). இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இருந்தார். கலெக்டர் சந்திரகலா காரில் வந்து இறங்கிய போது அவர் அருகில் சென்ற முனீசுவரி, திடீரென்று தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர், அவரை காப்பாற்றும்படி சத்தம் போட்டார். உடனே கலெக்டரின் உதவியாளர், டிரைவர் உள்ளிட்டோர் அந்த இளம்பெண்ணிடம் இருந்து கேனை பறித்து காப்பாற்றி அழைத்துச்சென்றனர். அவரிடம் கலெக்டர் சந்திரகலா விசாரணை நடத்தினார். பின்னர் முனீசுவரி அவரிடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் ராமநாதபுரம் அருகே சித்தனேந்தல் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் நாகபாண்டிக்கும் (33) கடந்த 2013&ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஸ்ரீகரன்(6) என்ற மகன் உள்ளான். எனது கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி போதைப்பொருள் பயன்படுத்தி, என்னையும் எனது தாயையும் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னையும் எனது மகனையும் ராமநாதபுரம் அரண்மனை பின்புறமுள்ள மிளகாய் கிட்டங்கி பகுதிக்கு கடத்தி அழைத்துசென்ற சித்தனேந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர், கத்திமுனையில் மிரட்டி என்னிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கிவிட்டு எனது மகனை கொண்டு சென்றுவிட்டனர்.
மீட்டுத்தர வேண்டும்
எனது மகனை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறி இருந்தார். இந்த மனு மீது போலீஸ் அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story