உப்பு தண்ணீரை தனி குழாய்களில் வினியோகம் செய்ய வேண்டும்
உப்பு தண்ணீரை தனி குழாய்களில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிவகாசி,
நல்ல தண்ணீர், உப்பு தண்ணீரை தனி, தனி குழாய்களில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சாதாரண கூட்டம்
சிவகாசி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் நேற்று ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ் மற்றும் அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் உள்பட 46 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பின்னர் தீர்மானங்களின் மீது கவுன்சிலர்கள் பேசியதாவது:&
முருகன்: பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தரைப்பாலம் அமைக்க வேண்டும்.
தலைவர்: அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
ரீட்டா ஆரோக்கியம்: விஸ்வநத்தம் பகுதியில் உள்ள விஜயலட்சுமி காலனி, முருகன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு சரிவர எரிவதில்லை.
அழைப்பு இல்லை
சுடர்வள்ளிசசிக்குமார்: பள்ளப்பட்டி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் போது நல்ல தண்ணீர், உப்பு தண்ணீர் இரண்டும் ஒரே குடிநீர் குழாய் களில் வினியோகம் செய்யப்படுகிறது. இதை தனித்தனி குழாய்களில் வினியோகம் செய்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
என்ஜினீயர்: நல்ல தண்ணீர், உப்பு தண்ணீர் இரண்டையும் தனித்தனி தொட்டிகளில் தான் சேமித்து வைக்க முடியும். தனித்தனி குழாய்களில் வினியோகம் செய்ய முடியாது.
ஆழ்வார்ராமானுஜம்: எனது கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் என்ன வளர்ச்சி பணிகள் நடக்கிறது என்று கூட எனக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. இதனால் தொகுதி மக்களுக்கு என்னால் உரிய பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
தலைவர்: தகவல் சொல்லகூடாது என்பது இல்லை. தகவல் சொல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இனி வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடக்கவிழாவுக்கு முன்னர் சம்மந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு உரிய முறையில் தகவல் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
மீனாட்சி சுந்தரி: எனது கவுன்சிலுக்கு உட்பட்ட புதுக்காலனிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது.
ஜெகத்சிங்பிரபு: முனீஸ்வரன்காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தனியாக சுடுகாடு கிடையாது. அதனால் அதே பகுதியில் உள்ள கண்மாய் பகுதியை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இப்பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Related Tags :
Next Story