தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Sept 2021 2:12 AM IST (Updated: 21 Sept 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்: 

சுகாதார நிலைய கட்டிடம் சேதம் 
திண்டுக்கல் மாவட்டம் வி.கூத்தம்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தின் கட்டிடம் சேதம் அடைந்து விட்டது. கட்டிடத்தின் சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து விழுகின்றன. இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், நோயாளிகளின் நலன்கருதி 24 மணி நேரமும் மருத்துவம் பார்க்கும் வகையில் சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். 
-பாலசந்தர், வி.கூத்தம்பட்டி. 

பொதுக்கழிப்பிட வசதி தேவை
பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர்  கணேஷ்நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் இங்கு பொதுக்கழிப்பிட வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பொதுக்கழிப்பிட வசதி செய்து தருவார்களா? 
-காளீஸ்வரன், அ.கலையம்புத்தூர். 

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
தேனி அல்லிநகரம் 13-வது வார்டில் விநாயகர் கோவில் அருகே வீட்டின் முன்பு செல்லும் சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாரல் மழை பெய்தால் கூட மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. அதன்மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-லோகேஸ்வரன், அல்லிநகரம். 

குண்டும், குழியுமான சாலை 
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் அருகில் சந்தைரோடு சந்திக்கும் இடத்தில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் இரவு நேரத்தில் மேம்பாலத்தில் இருந்து சந்தைரோட்டுக்கு திரும்பும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. மேலும் மழை காலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதை தடுக்க சாலையை சீரமைக்க வேண்டும். 
-ஜெயச்சந்திரன், திண்டுக்கல். 

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
பழனியை அடுத்த ஆயக்குடி அருகே உள்ள ருக்குவார்பட்டியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் சாக்கடை கால்வாயில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் தெருவில் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் முன்பு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். 
-ரகு, ருக்குவார்பட்டி.  


Next Story