பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
கடலூர் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்,
கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே உள்ள திருச்சோபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுளை அறிவித்ததன் அடிப்படையில் கடந்த 1ந்தேதி முதல் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பூதங்கட்டி அங்கன்வாடி மையத்தில் 17 குழந்தைகள் நேற்று மதியம் உணவு வழங்கப்பட்டது. அப்போது உணவு பரிமாறிய ஊழியர்கள் சாப்பாட்டை பார்த்தபோது, அதில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது. இதற்கிடையே உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் கொடிவேல் மகன்கள் வசீகரன் (வயது 6), குணாளன்(4) , மித்ரன்(2) ஆகிய 3 குழந்தைகளுக்கும் திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளையும் 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து குழந்தைகளை பார்வையிட்டு, அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் முறையாக சிகிச்சை அளிக்கும்படி அங்கிருந்த டாக்டர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தினார். இந்த சம்பவம் பூதங்கட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story