செல்போன்கள் திருடிய 3 வாலிபர்கள் கைது
நாகர்கோவிலில் வாடிக்கையாளர் போல் நடித்து செல்போன்கள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தனியாக உள்ள கடைகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் வாடிக்கையாளர் போல் நடித்து செல்போன்கள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தனியாக உள்ள கடைகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கடையில் செல்போன் திருட்டு
நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள ஒரு செல்போன் கடைக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வாலிபர்கள் செல்போன் வாங்குவது போல் வந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் கடைக்குள் சென்றார். மற்றொருவர் வெளியே மோட்டார் சைக்கிளில் இருந்தார்.
கடைக்குள் சென்ற வாலிபர், செல்போன்களை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் விலை உயர்ந்த செல்போன்களை எடுத்து காட்டும்படி அங்கிருந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்படி அவரும் 2 செல்போன்களை எடுத்து கையில் வைத்திருந்தார். அந்த சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபர் 2 செல்போன்களையும் பறித்து விட்டு வெளியே ஓடினார். ஏற்கனவே அங்கு தயாராக இருந்தவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருடிய வாலிபர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தன. அதன்அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர்.
3 வாலிபர்கள் கைது
இந்தநிலையில் திருடிய செல்போன்களை அந்த வாலிபர்கள் மற்றொரு வாலிபரின் உதவியுடன் விற்க பல்வேறு கடைகளுக்கு சென்றுள்ளனர். பின்னர் அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் உள்ள கடையில் செல்போன்களை விற்க முயன்ற போது 3 வாலிபர்கள் மீது கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், திருட்டு செல்போன்கள் என்பதை அறிந்த கடை உரிமையாளர், பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்தார்.
இதனை தொடர்ந்து வடசேரி போலீசார் விரைந்து வந்து வாலிபர்கள் 3 பேரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி போலீசார் கூறுகையில், செல்போன்கள் திருடியதாக திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த சேக்பாபு உசேன்(வயது 20), அஜய்(21) மற்றும் அழகியமண்டபம் பறக்கோடு பகுதியை சேர்ந்த லிபின் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏட்டை கொல்ல முயன்ற வழக்கு
இதில் லிபின் மீது ஏற்கனவே வாகன சோதனையின் போது போலீஸ் ஏட்டை வாகனம் ஏற்றி கொல்ல முயன்றதாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. மேலும், இந்த வாலிபர்கள் குழுவாக பிரிந்து சென்று தனியாக இருக்கும் கடைகளை நோட்டமிட்டு இத்தகைய திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய திருட்டு சம்பவங்களில் வாலிபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story