சட்டசபையில் கடும் அமளி;காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
கர்நாடக சட்டசபையில் பிரதமர் மோடி குறித்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் கருத்துக்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரசாரும் கோஷமிட்டதால் சட்டசபையில் கடும் அமளி உண்டானது. இதையடுத்து சபையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பிரதமர் மோடி குறித்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் கருத்துக்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரசாரும் கோஷமிட்டதால் சட்டசபையில் கடும் அமளி உண்டானது. இதையடுத்து சபையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பசவராஜ்பொம்மை பதில்
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13ந்தேதி பெங்களூரு விதானசவுதாவில் தொடங்கியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் மாட்டுவண்டிகளில் சட்டசபைக்கு வந்தனர். மேலும் 2வது நாள் கூட்டத்தில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி உள்பட பலர் பேசினர்.
இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், “டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் உதவி செய்கிறது. அத்தகைய போராட்டம் நாட்டின் வேறு எந்த பகுதியிலும் நடைபெறவில்லை. ஏனென்றால் அது காங்கிரஸ் ஆதரவுடன் நடைபெறும் போராட்டம்“ என்றார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளை பசவராஜ் பொம்மை அவமதித்துவிட்டதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினர். அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒரே நேரத்தில் குரலை உயர்த்தி பேசினர். இதனால் சபையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
வெளிநாட்டு சக்திகள்
அதன் பிறகு மீண்டும் பேசிய பசவராஜ் பொம்மை, “பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு உள்ளது. உங்கள் கட்சியின் ஆதரவுடன் தான் அந்த போராட்டம் நடக்கிறது“ என்று மீண்டும் கூறி தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் இடைத்தரகர்களும் உள்ளனர். ஏனென்றால் புதிய வேளாண் சட்டங்களால் இடைத்தரகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் காங்கிரசார் நாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியை கைவிட வேண்டும். இந்த போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.
கிரிமினல் கொள்ளை
ஆனால் வெளிநாட்டு இடைத்தரகர்கள், கமிஷன் இடைத்தரகர்கள் வேளாண் சந்தைகளை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அதனால் விவசாயிகளின் போராட்டத்திற்கு அந்த இடைத்தரகர்கள் உதவி செய்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு கொள்ளை அடிப்பதாகவும், அது கிரிமினல் கொள்ளை என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.
அப்படி என்றால் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல்&டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதையும் கிரிமினல் கொள்ளை என்று கூறலாமா?. பெட்ரோல்&டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மத்திய பிரதேசத்தில் இருந்த பா.ஜனதா அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனை வரியை குறைத்தது. நீங்கள் வரியை குறைத்தீர்களா?. இப்போது நீங்கள் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. அதனால் பொதுமக்கள் தங்களின் சொத்துகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று சித்தராமையா பேசினார்.
பெட்ரோலிய பொருட்கள்
சொத்துக்களை பணமாக மாற்றுவது என்பது விற்பனை ஆகாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மும்பை&புனே சாலை அமைத்து அதன் மூலம் நகர மயமாக்கப்பட்டது. அதன் மூலம் மத்திய அரசு ரூ.80 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியது. இதை செய்தது யார்?. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு தற்போது உள்ள மத்திய அரசால் மட்டுமே ஏற்பட்டது அல்ல.
பெட்ரோலிய பொருட்கள் மீது காங்கிரஸ் ஆட்சியில் 60 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் 30 சதவீதம் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வை நீங்கள் கொள்ளை என்று கூறினால், இதில் எது பெரிய கொள்ளை?. கிரிமினல் கொள்ளை என்று முன்பு வாஜ்பாய் உங்கள் அரசை பார்த்து கூறியதால் நீங்கள் வேதனை அடைந்திருக்கலாம். அதனால் காங்கிரஸ் கொள்ளை என்று அழைக்கலாமா?.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
கடும் அமளி- காங். வெளிநடப்பு
அப்போது சித்தராமையா குறுக்கிட்டு, “இது பா.ஜனதா கொள்ளை. காங்கிரஸ் கொள்ளை என்று நீங்கள் கூறுவது தவறு. நான் விலைவாசி உயர்வு குறித்து உண்மையான நிலையை இங்கே எடுத்து கூறினேன். இந்த விஷயத்தில் நான் அரசியல் பேசவில்லை“ என்றார். அப்போது அவர் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவான கருத்து ஒன்றை கூறினார்.
அதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் குரலை உயர்த்தி கூச்சலிட்டனர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதன்காரணமாக கடும் அமளியும் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பசவராஜ் பொம்மை மற்றும் சித்தராமையா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆதார விலை
காங்கிரசார் வெளிநடப்பு செய்தபோது, முதல்&மந்திரி பசவராஜ் பொம்மை, “நான் 10 நிமிடங்கள் பேசுகிறேன். அதன் பிறகு நீங்கள் வேண்டுமானால் வெளிநடப்பு செய்யுங்கள். நான் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் நீங்கள் வெளிநடப்பு செய்கிறீர்கள். நீங்கள் நாட்டை நீண்ட காலம் கொள்ளை அடித்தவர்கள். எங்களை கொள்ளையர்கள் என்று கூற உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. கடந்த காலங்களிலும் விலைவாசி உயர்வு குறித்து இந்த சபையில் விவாதிக்கப்பட்டது.
நாம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வது இல்லை. 85 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் விலையில் ஏற்ற&இறக்கம் காணப்படுகிறது. மத்தியில் எந்த கட்சியின் ஆட்சி இருந்தாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியால் ரூ.36 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது“ என்றார்.
மோடி குறித்த சர்ச்சை கருத்து நீக்கம்
சட்டசபையில் நேற்று சித்தராமையா பேசும்போது, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மோடி குறித்து சித்தராமையா கூறிய சர்ச்சை கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த குமார் பங்காரப்பா, மோடி குறித்து சித்தராமையா கூறிய கருத்தை நீக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி சித்தராமையா கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
Related Tags :
Next Story