தசரா யானைகளுக்கு நடைபயிற்சி
மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளுக்கு நடைபயிற்சி மற்றும் பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அபிமன்யு யானை 1,750 கிலோ மணல் மூட்டைகள் பாரத்தை சுமந்தது.
மைசூரு: மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளுக்கு பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அபிமன்யு யானை 1,750 கிலோ மணல் மூட்டைகள் பாரத்தை சுமந்தது.
மைசூரு தசரா விழா
மைசூருவில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா விழா உலகப்புகழ் பெற்றதாகும். அதன்படி இந்தாண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 7 முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படுகிறது. அதாவது மைசூரு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அபிமன்யு உள்ளிட்ட 8 யானைகளும் அரண்மனைக்கு வந்தடைந்துவிட்டன.
அவைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தாண்டும் 750 கிலோ எடை கொண்ட சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை அபிமன்யு யானையே சுமக்கிறது. யானைகளுக்கு நேரத்திற்கு நேரம் உணவுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை, குளிப்பாட்டுதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரண்மனையிலேயே யானைகளின் பாகன்களுக்கு உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாகன்களின் பிள்ளைகள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாரம் சுமக்கும் பயிற்சி
இந்த நிலையில் நேற்று தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்ளிட்ட 8 யானைகளுக்கும் பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானைக்கு 1,750 கிலோ எடையிலான மணல் மூட்டைகள் பாரத்தை மூன்று மணி நேரம் சுமப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டது. மற்ற யானைகளுக்கும் மணல் மூட்டைகள் பாரம் ஏற்றி பயிற்சி கொடுக்கப்பட்டது.
மேலும் தசரா யானைகளுக்கு பீரங்கிகளால் வெடிகுண்டு வெடித்து அதன் சத்தம் மற்றும் அதனுடைய நெடி தாங்கும் பயிற்சியும், அரண்மனை பின்புறத்தில் 3 நாட்கள் கொடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் மேளதாள வாத்தியங்கள், வாகனங்கள் ஒலியெழுப்பும் சத்தம் உள்ளிட்டவற்றை கண்டு யானைகள் மிராளமல் இருக்கவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட பயிற்சிகள் ஜம்பு சவாரி ஊர்வலம் முந்தைய நாள் வரை கொடுக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story