மகனை கொன்று தம்பதி தற்கொலை
தாவணகெரே டவுனில் மகனை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கமகளூரு: தாவணகெரே டவுனில் மகனை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி உடல்நலக்குறைவால் பாதிப்பு
தாவணகெரே டவுன் பரத் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி சுமா(30). இந்த தம்பதிக்கு 6 வயதில் துருவா என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சுமா கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கிருஷ்ணமூர்த்தி, மனைவி சுமாவை சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்றார்.
கிருஷ்ணமூர்த்தி, மனைவியின் மருந்து, மாத்திரைக்காக பல லட்சம் செலவு செய்தார். ஆனாலும் சுமாவுக்கு உடல்நலம் குணமாகவில்லை. இதற்கு மேல் ஆஸ்பத்திரிக்கு செலவு செய்ய கிருஷ்ணமூர்த்தியிடம் போதிய பணம் இல்லை. இதனால் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி சுமா மனமுடைந்து இருந்து வந்தனர். இதனால் தம்பதி, தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
மகனை கொன்றுவிட்டு...
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணமூர்த்தி, கடையில் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கினார். பின்னர் பூச்சிகொல்லி மருந்து பாட்டிலுடன் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, மகன் துருவாவை விஷமருந்து கொடுத்து கொன்றார். பின்னர் மனைவி சுமாவை விஷத்தை குடிக்க வைத்தார். இதனால் சிறிது நேரத்தில் சுமா உயிரிழந்தார். பின்னர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், தாவணகெரே ஆர்.எம்.சி. போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சிறுவன் உள்பட 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், மனைவியின் குணமாகததால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி, மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தூக்குப்போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஆர்.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையை கொன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. இந்த நிலையில் தாவணகெரே டவுனில் சிறுவனை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story