114 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது
எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு, கடலூர் மாவட்டத்தில் எந்தவொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மூடப்படவில்லை என்றும், 114 இடங்களில் செயல்படுகிறது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் சொரக்கல்பட்டில் நடந்தது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகள், பாதாள சாக்கடைகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் மாபெரும் தூய்மை பணி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
தீவிர கண்காணிப்பு
இந்த பணி வருகிற 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடலூர் நகராட்சியில் 151 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, 16 வாகனங்கள் மூலம் தினசரி தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகளை மேற்பார்வையிட பொறுப்பு அலுவலர்களை நியமித்து, மழைநீர் தேங்கும் மிகவும் அபாயகரமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்தும், பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர வடிகால், சிறிய வடிகால் என வகைப்படுத்தி தூய்மை பணிகளுக்கு தேவையான எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணிந்து கொண்டு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் தூய்மை பணி மேற்கொள்ளும் இடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பின், முன்னதாக உரியவர்களுக்கு தெரிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூடப்படவில்லை
மேலும் முன்னாள் முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சில இடங்களில் இயங்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் எங்கு நெல் கொள்முதல் நிலையம் இயங்கவில்லை என்பதனை அவர் பார்த்தார் என்று தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் எந்தவொரு கொள்முதல் நிலையங்களும் மூடப்படவில்லை.
தற்போது 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் ஆட்சியில் கடந்த ஆண்டு இந்த சமயத்தில் 68 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் இயங்கியது. அதனால் எடப்பாடி பழனிசாமி நெல் கொள்முதல் நிலையம் குறித்து வடிகட்டின பொய் கூறி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை விடுவதற்கு செய்தி இல்லை. ஆகையால் அறிக்கை விடும் போது சிந்தித்து அறிக்கை விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story