நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரம்
நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லை:
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்பட்டது. பெருகி வரும் நகர்களின் வளர்ச்சிக்கேற்ப பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை-தென்காசி இடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக நெல்லை பழைய பேட்டையில் இருந்து ஆலங்குளம் வரையிலும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு, ஒவ்வொரு பகுதியிலும் முதலில் இருவழிச்சாலை அமைக்கப்படுகிறது. அப்போது மற்றொரு புறம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அங்கு இருவழிச்சாலை அமைக்கும்போது, புதிய சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட சாலையில் வாகனங்கள் செல்லும்போது, புழுதி புயல் போன்று தூசுகள் காற்றில் பறக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசுகள் எழும்புகின்றன. வாகன ஓட்டிகளின் கண்களில் தூசுகள் விழுவதால், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட சாலையில் தண்ணீரை ஊற்றி நனைத்தாலும் வெயிலில் உடனே காய்ந்து விடுகிறது. எனவே கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை- தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைத்த பின்னர் மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஏற்கனவே தகவல் கிடைக்கப் பெற்றது. இந்த நிலையில் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவுக்கு அனுப்பிய மனுவில் "நெல்லை -தென்காசி 4 வழிச்சாலை பணியானது உலக வங்கி நிதி மற்றும் தமிழக அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த நெடுஞ்சாலையில் மாறாந்தையில் அமைக்கப்பட இருக்கும் சுங்கச்சாவடி திட்டத்தை கைவிட வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவுக்கு தென்காசி கோட்ட பொறியாளர் முருகன் பதில் அளித்துள்ளார். அதில் நெல்லை -செங்கோட்டை மாநில நெடுஞ்சாலை எண் 39-ல் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சுங்கச்சாவடி அமைக்கப்படும். 4 வழிச்சாலை பணி முழுமையாக முடிவடைந்த பிறகு சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கைககள் எடுத்து வருகிறது. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளது.
எனவே விரிவான திட்ட அறிக்கையில் சுங்கச்சாவடி உள்ளதால், உடனடியாக விரிவான திட்ட அறிக்கையை மறு மதிப்பீடு செய்து சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். நெல்லை -தென்காசி 4 வழிச்சாலை காய்கறி, மளிகை பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய போக்குவரத்து நடைபெறும் மிக முக்கிய சாலை ஆகும். இந்த சாலையில் சுங்கச்சாவடி அமைத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக மாறாந்தையில் அமைய இருக்கும் சுங்கச்சாவடி திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story