லாரி மீது ரெயில் மோதி கோர விபத்து
பெங்களூரு அருகே தண்டவாளத்தில் நின்ற லாரி மீது மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து உண்டானது.
பெங்களூரு: பெங்களூரு அருகே தண்டவாளத்தில் நின்ற லாரி மீது மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து உண்டானது.
லாரி மீது ரெயில் மோதல்
மைசூருவில் இருந்து தமிழ்நாடு மயிலாடுதுறைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நேற்று இரவு பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா உஸ்கூர் அருகே ஆவலஹள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு ஆளில்லா லெவல் கிராசிங்கில், தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் அவ்வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரி திடீரென ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து செல்லாமல் தண்டவாளத்தில் நின்றது. இந்த நிலையில், தண்டவாளத்தில் நின்ற லாரி மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. மோதிய வேகத்தில் லாரி சுக்குநூறாக நொறுங்கி முற்றிலும் சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக லாரியில் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் ரெயிலுக்கும், பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆனேக்கல் போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
டிரைவர் தப்பி ஓட்டம்
அப்போது அந்த பகுதியில் தண்டவாளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது தெரியவந்தது. மேலும் இரட்டை ரெயில் பாதையில், ஒரு பாதையில் மட்டும் ரெயில்கள் சென்று வந்ததும் மற்றொரு பாதையில் பணிகள் நடந்ததும் தெரியவந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக வந்த லாரி லெவல் கிராசிங்கை கடந்து செல்லாமல், தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. லாரியை டிரைவர் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியாததாலும், அந்த சந்தர்ப்பத்தில் ரெயில் வந்ததாலும் டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடி இருந்தார்.
இதன் காரணமாக அவர் உயிர் பிழைத்ததும், லாரி மீது ரெயில் மோதியதால் சுக்குநூறாக நொறுங்கி முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி டிரைவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கோர விபத்தில் உயிர் சேதம் மற்றும் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story