நெல்லை கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனுக்கள் போட்ட பொதுமக்கள்
நெல்லை கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்கள் போட்டு சென்றனர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்குவார். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்ள வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகில் மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று அதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டனர்.
மேலப்பாளையம் ஹாமீம்புரத்தை சேர்ந்த மைதீன் ஞானியார் மற்றும் பீடி தயாரிப்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாங்கள் ஒரு தனியார் பீடி கம்பெனிக்கு பீடி தயாரிப்பாளராக இருந்து பீடி தயாரித்து கொடுத்து வருகிறோம். ஆனால் அந்த நிறுவனம் கழிவு பீடிகளுக்கான மூலப்பொருட்களையோ, அதற்குரிய சம்பளம், போனஸ், லீவு சம்பளம் ஆகியவற்றை தரவில்லை. கூலியில் இருந்து தரவேண்டிய கமிஷன் தொகையையும் குறைத்து வழங்குகிறார்கள். எனவே எங்களுக்கு சேரவேண்டிய தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஉள்ளனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழ தோணித்துறையை சேர்ந்த முருகன் (வயது 46) என்பவர் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நான் பர்கிட் மாநகரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். எனது உறவினர் கொரோனாவால் இறந்து விட்டார். அவரது வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்தபோது, அவருடைய மகன்களுடன் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு 7 பேர் சேர்ந்து என்னை தாக்கினர். இதனால் 2 கால்களும் செயல் இழந்த நிலைக்கு போய் விட்டது. எனவே தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஉள்ளார்.
இதேபோல் பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக மனு பெட்டியில் போட்டனர்.
Related Tags :
Next Story