வேட்புமனு தாக்கலுக்கு அலைமோதிய மக்கள் கூட்டம்


வேட்புமனு தாக்கலுக்கு அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2021 10:19 PM GMT (Updated: 20 Sep 2021 10:19 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில், நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் 204 பஞ்சாயத்து தலைவர்கள், 1, 731 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 122 யூனியன் வார்டு உறுப்பினர்கள், 12 மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் நேரடியாக வாக்காளர்களால் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.

ஓட்டுப்பதிவு வருகிற 6&ந்தேதி மற்றும் 9&ந்தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் கடந்த 15&ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மந்தகதியில் இருந்த வேட்புமனு தாக்கல் நேற்று விறுவிறுப்பு அடைந்தது. யூனியன் அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,885 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்று முன்தினம் வரை 218 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று மேலும் 483 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 701 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே 870 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,234 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து 2, 104 பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை 23 பேரும், நேற்று 162 பேர் என மொத்தம் 185 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாருமே மனு தாக்கல் செய்யாத நிலையில் நேற்று 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,996 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,285 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 556 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,503 பேரும், யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 211 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 4,170 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (புதன்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story