100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு: தென்காசியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் கூறி அதை கண்டித்து தென்காசியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் சார்பில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பெருமாள் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எங்களது கிராமத்தில் கடந்த 2-9-2021 முதல் 8-9-2021 வரை 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 150 தொழிலாளர்கள் கருத்தப்பிள்ளையூர் கால்வாயில் வேலை பார்த்தனர். இவர்களில் சுமார் 40 பேருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்று 6 நாட்களுக்கு 600 ரூபாய் கூலி மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி 110 தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கூலி கணக்கில் வரவில்லை. ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் கேட்கும்போது முறையான பதில் இல்லை. எனவே இதுகுறித்து விசாரணை செய்து அரசு நிர்ணயித்த கூலியை வேலை பார்த்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பெற்றுத்தர வேண்டும். மேலும் புதிய அட்டை பதிவு செய்வதற்கு ரூ.1,000&ம், பழைய அட்டையை புதுப்பிக்க ரூ.500&ம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா, கருத்தப்பிள்ளையூர் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் விஜி, கோமதி, அன்னம்மாள், ரோஸ் விக்டோரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பட்டாடைகட்டி கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
பட்டாடைகட்டி பஞ்சாயத்தில் தாய் கிராமமான பட்டாடைகட்டி கிராமத்தை புறக்கணித்த ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறோம். குடிநீர் பிரச்சினைக்கு பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. நியாயவிலைக்கடை இடிந்து விழும் தறுவாயில் உள்ளதை பலமுறை முறையிட்டும், குளத்தை சீர் செய்ய பல முறை மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட கிராமசபை கூட்டம் கூட்டவில்லை. எனவே இந்த காரணங்களுக்காக உள்ளாட்சி தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story