புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்த 2 மாணவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு
புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்த 2 மாணவர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மாநகர பஸ் டிரைவர். இவருடைய மகன் லட்சுமன் சாய் (வயது 6). இவன், திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாரின் தங்கை மகனான ஓமேஸ்வரன் (8) இவரது வீட்டுக்கு வந்துள்ளான். இவன், அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவர்கள் இருவரும் அருகிலுள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் ஓமேஸ்வரன், லட்சுமன் சாய் இருவரும் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர், இருவரையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் சேர்த்தனர். அங்கு மாணவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story