குலசகேரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் பங்கேற்க அனுமதி கோரி உண்ணாவிரதம் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 97 பேர் கைது
குலசகேரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் பங்கேற்க அனுமதி கோரி உண்ணாவிரதம் இருந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 97 பேரை போலீசார் கைது செய்தனர்
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற நாகர்கோவில் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட 97 பேர் கைது செய்யப்பட்டனர்.
உண்ணாவிரதம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 6&ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15&ந் தேதி சூரசம்ஹாரத்துடன் விழா நிறைவு பெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு கொடியேற்றம், சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. மற்ற விழா நாட்களில் கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் அனைத்து விழா நாட்களிலும் முழுமையாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும், தசரா விழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குலசேகரன்பட்டினத்தில் நேற்று காலை பா.ஜனதா கட்சியினர் மற்றும் தசரா குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ. கைது
குலசேகரன்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், மாவட்ட மகளிரணி தலைவி தேன்மொழி, துணைத்தலைவி கண்மணி மாவீர பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் அய்யப்பன், உடன்குடி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் மற்றும் தசரா குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் ஆகியோர் அங்கு விரைந்து வந்து போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 97 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story