விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறி
உடுமலை பகுதியில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டியுள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டியுள்ளனர்.
இனப்பெருக்கம்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. வெயில் காலம் மட்டுமல்லாமல் குளிர்ந்த பருவநிலை நிலவும் காலங்களும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரிக்கும் பருவங்களாக உள்ளது. வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளின் அடியில் முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. முட்டையிலிருந்து வரும் இளம்புழுக்கள் ஓலைகளின் பச்சையத்தை சுரண்டி உணவாக்கிக் கொள்கின்றன.
இதனால் இலைகள் காய்ந்து விவசாயிகள் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.இந்தநிலையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளில்லாத ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்ற வேளாண்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.அதன்படி உடுமலை பகுதியில் தென்னை மரங்களின் அடித்தண்டுகளில் மஞ்சள் நிற ஓட்டும் பொறிகளைக் கட்டி வெள்ளை ஈக்களைகட்டுப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒட்டும் தன்மை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை தென்னை வயல்களில் தொங்க விட வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கென மஞ்சள் நிற பாலிதீன் காகிதத்தில் விளக்கெண்ணெய் தடவி ஒட்டும் பொறிகளைத் தயாரிக்கிறோம். அவற்றை தென்னை மரங்களுக்கிடையில் குச்சிகளை ஊன்றி தொங்க விடும்போது காற்றில் அசைந்து விரைவில் ஒட்டும் தன்மை இழந்து விடுகிறது. அதேநேரத்தில் தென்னை மரங்களின் அடித்தண்டில் ஒட்டும் பொறிகளை கட்டும்போது விரைவில் உலர்வதில்லை.
அத்துடன் அனைத்து மரங்களிலும் இவ்வாறு கட்டும்போது அதிக எண்ணிக்கையிலான வெள்ளை ஈக்கள் அதில் ஒட்டி உயிரிழக்கின்றன.இதனால் வெள்ளை ஈக்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை சேதப்படுத்தும் அணில், எலி போன்றவற்றின் தொல்லையும் பெருமளவு குறைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
களைக்கொல்லிகள்
இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:&கூடுதலாக ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்துவது தவறில்லை.அதேநேரத்தில் களைக்கொல்லிகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.வெள்ளை ஈக்களின் அனைத்து நிலைகளிலும் அவற்றை உணவாக்கக் கூடிய இரை விழுங்கிகளை தோட்டத்தில் விடலாம், மேலும் வெள்ளை ஈக்களின் இயற்கை எதிரிகள் உருவாகக் கூடிய சூழலை தோப்புகளில் உருவாக்க வேண்டும்.இதற்கு பயறு வகைப் பயிர்களை தென்னை மரங்களில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story