துப்புரவு பணியாளர்களுக்கு 2 ஆண்டு சம்பளம் நிலுவை


துப்புரவு பணியாளர்களுக்கு  2 ஆண்டு சம்பளம் நிலுவை
x

மடத்துக்குளம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால் சுகாதாரப் பணிகளில் சிக்கல் ஏற்படுகிறது.

போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால் சுகாதாரப் பணிகளில் சிக்கல் ஏற்படுகிறது.
மாணவர்கள் ஆர்வம்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதனடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் போதுமான வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போதுமான கழிவறைகள், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கு கிராமப்புற மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் தற்போது கொரோனா பெருந்தொற்றால் பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வருமான இழப்பைச் சந்தித்துள்ள பல பெற்றோர் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சம்பளம் நிலுவை
இந்தநிலையில் பள்ளியில் வேலை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுமார் 2 ஆண்டுகளாக சம்பளம் நிலுவையில் உள்ளதால் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். 
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதற்காக கிராம வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 3 ஆயிரம் என்ற குறைந்த தொகையே வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.இதனால் வறிய நிலையில் உள்ள பணியாளர்களின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒருசில பள்ளிகளில் அவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்கின்றனர். ஆனாலும் அவர்களை வேலை வாங்குவதில் சிக்கல் ஏற்படுவதால் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கான சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story