இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும்


இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 21 Sept 2021 7:42 PM IST (Updated: 21 Sept 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவு குறித்து மாவட்ட அளவில் செயல்படுத்துதல் தொடர்பாக அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமைப்புசாரா தொழிலாளர்களின் உப குழுக்களான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலையாட்கள், தெரு வியாபாரிகள், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், செங்கல்சூளையில் பணி செய்யும் தொழிலாளிகள் போன்றவர்களில் ஏற்கனவே கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களை தவிர பிற அமைப்புசாரா தொழிலாளர்களை அந்தந்த துறையின் மாவட்ட அலுவலர்கள் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் குழுக்கள் வழியாக அமைப்புசாரா பணியாளர்களை பதிவு செய்ய வைக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களை தரவு தளத்தில் பதிவு செய்வதற்கு மாவட்ட அளவில் முகாம் நடத்தி பொதுசேவை மையம் மற்றும் செல்போன் செயலி வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய ஏதுவாக விவாதங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டம், துண்டுபிரசுரங்கள், விளம்பரம் மூலம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பணிகளை அந்தந்த துறை சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்களுடன், அந்தந்த துறையின் பிற அலுவலர்களுடன் ஒருங்கிணைத்து அமைப்புசாரா தொழிலாளர்களை மீஷிபிஸிகிவி றிஷீக்ஷீ௴ணீறீ என்ற தரவு தளத்தில் பதிவு செய்து குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும். இந்த பணியை டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்(வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தொழிலாளர்துறை உதவி ஆணையர்கள் தனபாலன்(அமலாக்கம்), ராஜசேகர்(சமூக பாதுகாப்பு திட்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story